tamilnadu

img

அயோத்தி தீர்ப்பில் உள்ள மறைக்க முடியாத முரண்பாடுகள் - பிருந்தா காரத்

அயோத்தி பிரச்சனை தொடர்பான உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, வெகு நாட்கள் நீடித்த ஒரு பிரச்சனைக்கு சட்டரீதியான முடிவை அளித்துள் ளது. இந்த தீர்ப்பு தொடர்பாக மேல் முறையீடு உரிமை உள்ளது என்பது உண்மையே! எனினும் இந்த உரிமை பயன் படுத்தப்படுமா என்பது தெரியவில்லை. இந்த பிரச்சனை பயணித்த பாதையை பரிசீலனை செய்யும் பொழுது இதற்கு முடிவு நீதிமன்ற தீர்ப்புதான் என்பது தெளிவாக அறியப் பட்டது. அந்த தீர்ப்பு இப்பொழுது தரப்பட்டுள்ளது. அதனை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் தீர்ப்பை ஏற்றுக் கொள்வது என்பதன் பொருள் திருப்திகர மான தீர்வு கிடைத்துவிட்டது என்பது அல்ல! தேசங்கள், சமூகங்கள், மக்கள் பிரிவினர், தனிப்பட்ட நபர்கள் பல்வேறு சூழல்களில் முரண்பாடுகளை தீர்க்க இத்தகைய தீர்ப்புகளை அல்லது முடிவுகளை இறுதியில் பெறுகின்றனர். அத்தகைய சூழல்களில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டது அல்லது தமக்கு சொந்தமான ஒன்று பறிக்கப்பட்டது எனும் உணர்வு இருப்பது இல்லை. ஆனால் அத்தகைய நியாயமான உணர்வு அயோத்தி தீர்ப்பில் கிடைத்த தாக கூற இயலாது. இந்த தீர்ப்பு ஏற்றுக் கொள்ளப்படும். ஆனால் திருப்திகரமான தீர்வு எனும் உணர்வு உருவாகும் வாய்ப்பு இல்லை. ஏனெனில் இறுதித் தீர்ப்புக்கு அடிப்ப டையாக உள்ள சில மூலக்கூறுகள் கேள்விக்கு உரியன வாக உள்ளன.

எனினும் ஒரு எச்சரிக்கையை தெளிவாக்க வேண்டியது அவசியம்.  தீர்ப்பில் இந்து தரப்பு எனவும் முஸ்லிம் தரப்பு எனவும் குறிப்பிடப்படுகிறது. இது அந்த வழக்கில் தொடர்புடைய வாதி அல்லது பிரதிவாதிகளையே குறிப்பிடுகிறது. இந்து தரப்பு எனில் இந்தியாவில் உள்ள அனைத்து இந்துக்களையும் அல்லது முஸ்லிம் தரப்பு எனில் அனைத்து முஸ்லிம்களை யும் குறிப்பிடுவதாக ஆகாது. தமது பெயரால் அரங்கேற்றப் பட்ட பல கொடுமைகளை வெறுத்த இந்துக்கள் உண்டு. முஸ்லிம் சமுதாயத்திலும் கூட பல வேறுபட்ட கருத்துகள் உண்டு. எனவே தீர்ப்பு குறிப்பிடுவது வாதி பிரதிவாதிகளைத் தானே தவிர அந்த சமூகங்கள் அல்ல என்பதை கணக்கில் கொள்ள வேண்டும்.

இடித்தவர்களுக்கே உரிமையா?

இந்த தீர்ப்பில் உள்ள மிகவும் வேதனை தரும் அடிப்படைக் கேள்வி என்ன?

1949ஆம் ஆண்டு மசூதிக்குள் சிலைகள் வைக்கப்பட்ட தும் 1992ஆம் ஆண்டு மசூதி தகர்க்கப்பட்டதும் “மிகவும் தீவிரமான சட்ட மீறல்கள்” என தீர்ப்பு ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இந்த சட்ட மீறல்களை நடத்தியவர்களிடமே பிரச்ச னைக்குரிய நிலம் முழுவதுமே ஒப்படைக்கப்படுகிறதே! ஏன்? இந்த முடிவை நியாயப்படுத்தும் வகையில் ஏதாவது ஆழ மான காரணிகள் உள்ளனவா? இது குறித்த ஏற்றுக்கொள்ளத் தக்க எவ்வித நியாயங்களையும் தீர்ப்பு முன்வைக்கவில்லை.

இந்த பிரச்சனை, வெறுமனே இடம் எவருக்கு சொந்த மானது எனும் முரண்பாடு மட்டுமல்ல; இது அடிப்படையில் ஒரு அரசியல் பிரச்சனை என்பதுதான் நமது நிலைப்பாடு. தன் முன்னால் வந்துள்ள சட்டப் பிரச்சனை இடம் தொடர்பானது மட்டுமே என  பல இடங்களில் கூறினாலும் தன்னை அறியாம லேயே இது ஒரு அரசியல் பிரச்சனை என்பதை தீர்ப்பு ஏற்றுக் கொள்கிறது. பிரச்சனைக்குரிய இடத்தை மூன்று சம பங்குகளாக பிரித்து வழக்கில் தொடர்புடைய மூன்று வாதி பிரதிவாதிகளுக்கு தருவது எனும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிராகரிக்கிறது. அதற்கு சொல்லப்படும் காரணம் என்ன? “அவ்வாறு செய்வதன் மூலம் ஒரு நீடித்த சமாதானத்தை யும் அமைதியையும் மீட்க முடியாது”.

வேறு எந்த தீர்ப்பும் அமைதியை தகர்க்குமா?

எனவே உச்சநீதிமன்றம் “நீடித்த சமாதானமும் அமைதியும்” என்பதும் தனது தீர்ப்பின் பல நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என நம்பியது  என்பதை நாம் ஊகிக்க முடியும். ஆகவே தீர்ப்பின் அடித்தளம் என்பது சட்டப் பிரச்சனைகளின் அடிப்படையில் என்பதற்கும் மேலாக அர சியல் மதிப்பீடு மேலோங்கியிருந்தது என்பது தெரிகிறது. பிரதமரும் ஏனைய தலைவர்களும், மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும் தீர்ப்பு எப்படி அமைந்தாலும் அனை வரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் கூறினர். ஆனால் அதே சமயத்தில் ஆளும் தரப்பினரின் மிக உயர்ந்த பொறுப்பில் உள்ள தலைவர்கள் என்ன கூறினார்கள்? மசூதி எந்த இடத்தில் இருந்ததோ அதே இடத்தில்தான் கோவில் எழுப்பப்படும் என மூர்க்கத்தனமாக பிரச்சாரம் செய்து வந்தனர். தமக்கு எதிராக தீர்ப்பு வந்தால் “நீடித்த சமாதான மும் அமைதியும்” இருக்காது என தெளிவாக மிரட்டல் விடுத்த னர். எனவே இந்த தீர்ப்பின் அடித்தளம் என்பது “அரசியல் கூறு களை” கொண்டதாக உள்ளது என மதிப்பீடு செய்வது தவிர்க்க இய லாததாக உள்ளது. தீர்ப்பின் மற்ற அனைத்து அம்சங்களையும் இந்த அரசியல் அம்சம்தான் தீர்மானித்ததாக தெரிகிறது.

தீர்ப்பின் சுய முரண்பாடு

இந்த தீர்ப்பு, சட்டத்தின் அடிப்படையில் அல்ல; நம்பிக்கை யின் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும் எனும் வாதத்திலி ருந்து தன்னை விடுவித்துக் கொள்ள  மிகவும் கடுமையான முயற்சிகளை செய்து உள்ளது. “இந்த நீதிமன்றம் இடம் தொடர்பான உரிமையை நம்பிக்கை அடிப்படையில் அல்ல; மாறாக நிரூபணங்கள் அடிப்படையில்தான் தீர்மானிக்கும்” என தீர்ப்பு கூறுகிறது.  ராமர் பிறந்த இடம் (ராம் ஜன்மஸ்தான்) என்பதை சட்ட ரீதியாக அங்கீகரிக்க வேண்டும் எனும் கோ ரிக்கையை தீர்ப்பு நிராகரிக்கிறது. இத்தகைய கோரிக்கையை ஏற்றால் “ முரண்பாடுகளை உருவாக்கியுள்ள இடம் பற்றிய உரிமையை ஏற்கெனவே நிலைநாட்டப்பட்ட சட்டக் கோட்பா டுகளின் அடிப்படையில் தீர்மானிக்க முடியாது; மாறாக நம்பிக்கை சார்ந்தும் பக்தர்கள் என்ன நம்புகிறார்கள் என்பதன் அடிப்படையிலும்தான் தீர்மானிக்க முடியும்” எனவும் தீர்ப்பு கூறுகிறது.

ஆனால் இதே பிரச்சனையில் தான் முன்வைக்கும் சரியான கூற்றுகளுக்கு முரணான ஒரு முடிவுக்கு தீர்ப்பு வருகிறது. தீர்ப்பு சுய முரண்பாட்டை வெளிப்படுத்துவதாக தெரிகிறது. அந்த குறிப்பிட்ட இடம் எவரின் அனுபவ உரி மையில் (POSSESSION) உள்ளது என்பதைத் தீர்மானிக்கும் பொழுது வழக்கில் தொடர்புடைய இரு பகுதியினருக்கு இரு வெவ்வேறு அளவு கோல்களை பயன்படுத்தியுள்ளது.

தீர்ப்புக்கு அடிப்படை சட்டமா? சமய நம்பிக்கையா?

பாபர்மசூதி 1528ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 1528க்கும் 1856க்கும் இடையே எவரின் அனுபவ உரிமையில் மசூதி இருந்தது? 

தீர்ப்பு கூறுகிறது:

“1857க்கு முன்பு, இந்த கட்டிடம் கட்டப்பட்ட 16ஆம் நூற்றாண்டிலிருந்து இந்த கட்டிடத்தின் உள்பகுதி தமக்கு மட்டுமே முற்றிலுமாக அனுபவ உரிமை படைத்ததாக இருந்தது என்பதை நிரூபிக்க முஸ்லிம்கள் எந்த நிரூ பணத்தையும் அளிக்கவில்லை.” தீர்ப்பின் இந்த முடிவு விநோதமாக உள்ளது. 1528க்கும் 1722க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் இந்த பகுதி முழுதும் முகாலயர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1722க்கு பின்னர் இந்த பகுதி அவாத் நவாப்களின் கீழ் வந்தது. 1856ல் இந்த  பகுதியை பிரிட்டிஷார் தமது சாம்ராஜ்யத்தில் இணைத்து கொண்டனர். இதன் பிறகுதான் இந்த இடம் எவருக்கு சொந்த மானது எனும் முரண்பாடு எழுந்தது. புகார் பதியப்பட்டது.

முஸ்லிம்களின் ஆட்சி இருந்த காலம் முழுதும் இந்த இடம் முஸ்லிம் மக்களின் அனுபவ உரிமையில் இருந்தது என்பதும் அவர்கள் தொழுகை நடத்தினார்கள் என்பதும் வெள்ளிடைமலை! வேறு என்ன நிரூபணம் வேண்டும்?  இந்துக்கள் தரப்பும் வெளிப்பகுதி தமக்கு மட்டுமே முற்றிலுமாக அனுபவ உரிமையில் இருந்தது என்பதை நிரூபிக்க இயலவில்லை. ஆனால் இதனை தீர்ப்பு கவனத்தில் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. எனவே இரு தரப்பின் உரிமையை முடிவு செய்யும் பொழுது முரண்பாடான சமத்துவ மற்ற ஒரு அளவுகோல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தீர்ப்பு கூறுகிறது:

“முஸ்லிம்களின் ஒரு மசூதி எனும் கட்டிடம் அங்கு இருந்தா லும் கூட அந்த பிரச்சனைக்குரிய இடத்தில்தான் ராமர் பிறந்தார் எனும் இந்துக்களின் சமயப் பற்றும் நம்பிக்கை யின் உறுதித் தன்மையும் எவ்வித அசைவுக்கும் உள்ளாக வில்லை.”  - இந்த வாதம்தான்,  முஸ்லிம்கள், அனுபவ உரிமை தமக்கு மட்டுமே முற்றிலுமாக இருந்தது என்பதை நிரூபிக்க வில்லை எனும் தீர்ப்பின் ஒரு பொருத்தமற்ற - முற்றிலும் தவறான முடிவுக்கு இட்டு செல்கிறது. இந்துக்கள் தொடர்ந்து அங்கு வழிபாடு நடத்திய “சாத்தியக்கூறுகள் மிக அதிகமாக” உள்ளதால் பிரச்சனைக்குரிய இடத்தின் உரிமை இந்துக்க ளுக்கு நிலைநாட்டப்படுகிறது எனவும் தீர்ப்பு கூறுகிறது.

தமக்கு மட்டுமே முற்றிலுமாக அனுபவ உரிமை இருந்தது என்பதை நிரூபிக்க வேண்டும் என முஸ்லிம்கள் பணிக் கப்பட்டனர். ஆனால் “ராம் லல்லா” (குழந்தை ராமர்) அங்கு தான் பிறந்தார் எனும் சமயப் பற்று மற்றும் நம்பிக்கை அடிப்படையில் எதிர்த்தரப்பின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப் படுகிறது. சமயப் பற்று அல்லது பக்தர்களின் நம்பிக்கை அடிப்படையில் இடத்தின் அனுபவ உரிமையை முடிவு செய்யக்கூடாது என தான் முன்வைத்த கூற்றுக்கு மாறாக அதே சமய நம்பிக்கையின் அடிப்படையில்தான் பிரச்சனை தீர்க்கப்படுகிறது. எனவே மசூதி அது கட்டப்பட்ட காலத்திலி ருந்து தொடர்ச்சியாக முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டு வந்தாலும் அந்த நிலம் வி.எச்.பி.க்கு தரப்படுகிறது. தீர்ப்பின் பின் இணைப்பாக ஒரு நீதிபதியின் ஒரு ஆவ ணம் உள்ளது. இந்த நீதிபதியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்த இணைப்பில் கீழ்கண்டவாறு குறிப்பிடப்படுகிறது:

“அந்த மசூதி உள்ள இடத்தில்தான் பகவான் ராமர் பிறந்தார் எனும் சமய நம்பிக்கை இந்த மசூதி கட்டப்படுவதற்கு முன்பும் அதற்கு பின்பும் இந்துக்களுக்கு தொடர்ந்து இருந்து வந்துள் ளது. இது பல ஆவணங்களின் மூலம் நிரூபிக்கப்படுகிறது”. இது ஒரு இணைப்புதான் என்றாலும் இதில் கூறப்பட்டுள்ள கருத்துதான் தீர்ப்பில் ஒரு பகுதியாக பிரதிபலித்துள்ளது. அதன் அடிப்படையில்தான் பிரச்சனைக்குரிய இடம் ராம் லல்லாவுக்கு தரப்பட்டுள்ளது.

வழக்கின் வாதி/பிரதிவாதியாக தெய்வம் இருக்க இயலுமா?

இத்தீர்ப்பின் மூலம் ராம் லல்லாவிற்குத்தான் இந்த இடம் அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நிகழ்வுகளில் ஒரு தெய்வம் அல்லது கடவுளை அனைத்து உரிமைகளையும் கொண்ட ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்வது எனும் விநோத முன்மாதிரியை இந்திய நீதித்துறை உருவாக்கியுள்ளது.    இவ்வாறு ஏன் செய்யப்பட்டது?

கடவுளுக்கு நிலப்பிரபுக்களால் நன்கொடையாக தரப்பட்ட  சொத்தையும் நிலத்தையும் பாதுகாக்கவே இவ்வாறு செய்யப் பட்டது. நிலச்சீர்திருத்த இயக்கங்களின் விளைவாக நில உச்ச வரம்பு கொண்டுவரப்பட்டது. பல மாநிலங்களில் இந்த உச்ச வரம்பு சட்டத்தை ஏமாற்ற நிலப்பிரபுக்கள் இந்த முறையைத் தான் கையாண்டனர். இந்த வழக்கில்  கடவுளும் ஒரு வாதி அல்லது பிரதிவாதி என்பது கேள்விக்கு உள்ளாக்கப்பட வில்லை. எனினும் சில ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டுவது போல ராம் லல்லாவும் இந்த வழக்கின் ஒரு தரப்பினராக 1989ல்தான் வருகிறார். ஆனால் இந்த வழக்கு 1950லிருந்து நடந்து வருகிறது.  ஆகவே ராம் லல்லா ஒரு தரப்பினராக வழக்கில் இணைக் கப்பட்டது என்பது சட்டப்பூர்வமானது அல்ல. இவ்வாறு செய்த தன் மூலம் வழக்கில் தலையீடு செய்வது என்பது ஒரு குறிப்பிட்ட குறுகிய வட்டத்திற்குள் சுருங்கியது.

தீர்ப்பின் இத்தகைய அடித்தளங்கள் கேள்விக்குரிய வையாக உள்ளன. இந்த சூழலில் முஸ்லிம்களுக்கு நியாயம் வழங்க அரசியல் சட்டத்தின் 142வது பிரிவை பயன்படுத்தி ஒரு மசூதியை கட்ட 5 ஏக்கர் நிலத்தை கொடுப்பது விநோதமாக உள்ளது. முஸ்லிம்கள் நிலம் வேண்டும் என்று கேட்கவே இல்லை. அவர்களின் முக்கிய வாதம் என்ன? மசூதியும் அது கட்டப்பட்ட இடமும் அனுபவ உரிமையின் அடிப்படையில் தங்களுக்கு உரிமை படைத்தது என்பதுதான் அவர்களின் வாதம். அதனை நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அதன் பின்னர்  142வது பிரிவை பயன்படுத்த வேண்டும் எனில், அதை பொ ருத்தமாக எப்படி பயன்படுத்தி இருக்கலாம் என்பதும் முக்கிய மானது. மசூதி தகர்க்கப்பட்டதற்கு காரணமானவர்களை ஒரு காலவரம்புக்குள் உடனடியாக தண்டனை வழங்கும் விதத்தில் அந்தப் பிரிவை பயன்படுத்தி இருக்கலாமே! அந்த வழக்குகள் 27 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வரு கின்றன. ஆனால் அந்த வழக்கை விரைவுபடுத்த எந்த ஆலோ சனையும் நீதிமன்றம் முன்வைக்கவில்லை.

தீர்ப்பின் சில  குறிப்பிடத்தக்க அம்சங்கள்

அதே சமயத்தில் மதச்சார்பின்மைக்கு உதவும் பல பதிவுக ளும் கூற்றுகளும் இந்த தீர்ப்பில் உள்ளன என்பதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. உதாரணத்திற்கு தொல்லியல் துறையின் முடிவுகளை குறிப்பிட்டாலும் இந்த தீர்ப்பு மசூதியின் கீழ் ஒரு கோவில் உள்ளது என்பதற்கு நிரூபணம் இல்லை என்று கூறுகிறது. மசூதி கட்டுவதற்கு அங்குள்ள ஒரு கட்டிடம் தகர்க்கப்பட்டது என்பதற்கும் நிரூபணம் இல்லை எனவும் தீர்ப்பு கூறுகிறது. இது ராமர் கோவில் பிரச்சாரகர்க ளின் ஒரு முக்கிய அடிப்படையைத் தகர்க்கிறது. ஏற்கனவே இருந்த கோவில் தகர்க்கப்பட்டுத்தான் பாபர் மசூதி கட்டப் பட்டது; இது பெரிய வரலாற்று அநீதி; இந்த அநீதிக்கு பதில் காணப்பட வேண்டும் எனும் வஞ்சக கருத்தாக்கத்தை தீர்ப்பு நிராகரிக்கிறது.

தீர்ப்பு இன்னொரு குறிப்பிடத்தக்க கருத்தையும் முன் வைக்கிறது. வரலாற்றின் கடந்தகால நகர்வுடன் முரண்படும் எவர் ஒருவரும், கடந்த கால தவறு என தான் கருதும் ஒன்றை சரி செய்ய சட்டத்தை பயன்படுத்த முடியாது என தீர்ப்பு குறிப்பிடுகிறது. வேறு சில மசூதிகளை கேள்விக்கு உள்ளாக்க இந்த தீர்ப்பை பயன்படுத்த எத்தனிக்கும் பரிவாரத்தினரின் முயற்சிக்கு இது எதிராக உள்ளது.

மதச்சார்பின்மையின் சில அடிப்படை மதிப்புகளை தீர்ப்பு ஆங்காங்கே குறிப்பிடுகிறது. மிக முக்கியமாக 1991ம் ஆண்டு இயற்றப்பட்ட வழிபாட்டு தலங்களின் பாதுகாப்பு சட்டத்தையும் நியாயமானது என தீர்ப்பு குறிப்பிடுகிறது. எனினும் தீர்ப்பில் தீவிரமான முரண்பாடுகள் உள்ளன.  அவற்றில் சிலவற்றையே மேலே குறிப்பிட்டுள்ளோம். இந்த முரண்பாடுகளை புறம் தள்ள முடியாது.

தமிழில்: அ.அன்வர் உசேன்






 


 

;